டீக்கடைக்குள் லாரி புகுந்தது; டிரைவர் உள்பட 3 பேர் பலி


டீக்கடைக்குள் லாரி புகுந்தது; டிரைவர் உள்பட 3 பேர் பலி
x

தாராபுரம் அருகே சாலையோர டீக்கடைக்குள் சிமெண்டு கலவை லாரி புகுந்த விபத்தில் லாரி டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பூர்

தாராபுரம் அருகே சாலையோர டீக்கடைக்குள் சிமெண்டு கலவை லாரி புகுந்த விபத்தில் லாரி டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டீக்கடைக்குள் புகுந்த லாரி

தூத்துக்குடியில் இருந்து சிமெண்டு கலவை பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரி ஒன்று சேலம் மாவட்டம் மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மேட்டூர் நாவலப்பட்டியைச் சேர்ந்த ரத்தினகுமார் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று காலை 7.30 மணி அளவில் தாராபுரம்- திருப்பூர் ரோட்டில் குண்டடம் அருகே உள்ள சூரியநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டோரத்தில் இருந்த உயரழுத்த மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் மின் கம்பம் உடைந்தது. பின்னர் அதே வேகத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் இருந்த கலாமணி என்பவரின் டீக்கடைக்குள் புகுந்தது. மின் கம்பத்தில் மோதிய வேகத்தில் லாரியின் முன்பக்க கேபினின் மேல்பகுதி தனியாக கழன்று ரோட்டில் விழுந்தது.

3 பேர் பலி

இந்த கோர விபத்தில் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த கோப்பணகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி (80), ராமநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி முத்துச்சாமி (65), எஸ்.காஞ்சிபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி செல்லாத்தாள் (65), கோப்பணகவுண்டம்பாளையத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி (75) மற்றும் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த வெருவேடம்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மகேந்திரன் (19) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

விபத்துக்கு காரணமான லாரியின் டிரைவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குண்டடம் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சுப்பிரமணி, முத்துச்சாமி, லாரி டிரைவர் ரத்தினகுமார் ஆகியோர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்ற 3 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மின்சாரம் துண்டிப்பு

லாரி மின் கம்பத்தில் மோதிய சிறிது நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. லாரி டிரைவரின் தூக்கமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோர விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் குண்டடம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story