தொப்பூர் கணவாயில்லாரி-ஆட்டோ கவிழ்ந்து விபத்துடிரைவர்கள் உள்பட 3 பேர் காயம்

நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் லாரி- ஆட்டோ கவிழ்ந்து டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
தாறுமாறாக ஓடிய லாரி
மராட்டிய மாநிலத்தில் இருந்து ராட்சத இரும்பு பைப் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி தூத்துக்குடிக்கு புறப்பட்டது. லாரியை குஜராத் மாநிலத்தை சேர்ந்த சத்தம்சிங் (வயது35) என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று காலை வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் சத்தம்சிங் இடிபாடுகளில் சிக்கி தவித்தார். இதுகுறித்து தொப்பூர் போலீசாருக்கும், சுங்கச்சாவடி ரோந்து படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து டிரைவரை மீட்டு, சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
ஆட்டோ கவிழ்ந்தது
இந்த விபத்து நடந்து சிறிது நேரத்திலேயே, நல்லம்பள்ளி பகுதியில் இருந்து தொப்பூருக்கு பூ பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு ஆட்டோ தொப்பூர் கணவாய் வழியாக நேற்று காலை வந்தது. அப்பகுதியில் விபத்து நடந்ததால், வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. அப்போது ஆட்டோ, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த நார்த்தம்பட்டியை சேர்ந்த விவசாயி தீனா (24), ஆட்டோ டிரைவர் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் விபத்துக்குள்ளான ஆட்டோவை போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






