சினிமா படப்பிடிப்பில் விபத்து: சண்டை பயிற்சியாளர் பலி


சினிமா படப்பிடிப்பில் விபத்து: சண்டை பயிற்சியாளர் பலி
x

வண்டலூர் அருகே சினிமா படப்பிடிப்பில் இரும்பு கயிறு அறுந்து விழுந்து சண்டை பயிற்சியாளர் பலியானார்.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் வெற்றிமாறன். இவர் பொல்லாதவன், வடசென்னை, அசுரன் உள்பட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் நகைச்சுவை நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து 'விடுதலை' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகர் விஜய்சேதுபது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் ஒருபகுதி படப்பிடிப்பு சென்னை அருகே வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பல ஏக்கர் இடத்தில் செட் அமைத்து நடைபெறுகிறது.

இந்த நிலையில் நேற்று ரெயில் மீது சண்டை போடும் காட்சி நடைபெற்றது.

அப்போது ரெயில் மீது சண்டை பயிற்சியாளர் சுரேஷ் (வயது 59), என்பவர் சண்டையிடும்போது திடீரென இரும்பு கயிறு அறுந்ததில்ம் ரெயில் பெட்டி மேலே இருந்த சுரேஷ் தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த சுரேஷை அங்கு இருந்த சக ஊழியர்கள் உடனடியாக மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ஏற்கனவே சுரேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அவரது உடலை ஓட்டேரி போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் படப்பிடிப்பு நடைபெற்ற ஊனமாஞ்சேரி கிராமத்திற்கு சென்று ரெயில் பெட்டி மீது சண்டை போடும் காட்சி எடுக்கப்பட்ட இடத்தில் விசாரணை நடத்தினர்.

இது குறித்து ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது:-

ஊனமாஞ்சேரி கிராமத்தில் 'விடுதலை' திரைப்பட படப்பிடிப்பு தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு போலீசாரிடம் எந்த விதமான அனுமதியும் வாங்காமல் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்து சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவத்தால் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.


Next Story