பிரதமர் மோடி வருகையால் மேலும் பிரபலமடைந்த அரிச்சல்முனை
பிரதமர் மோடி வந்து சென்ற பிறகு அரிச்சல்முனைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தனுஷ்கோடி,
3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் தமிழ்நாடு வந்தார். பயணத்தின் முதல்நாளில் சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பயணத்தின் 2-வது நாளான நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் சென்றார். அங்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து ராமேசுவரம் சென்ற பிரதமர் மோடி ராமநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்தார்.
பயணத்தின் 3-வது நாளான இன்று பிரதமர் மோடி ராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் வழிபாடு நடத்தினார். அங்கு பிரதமர் மோடி கடற்கரையில் பூக்கள் தூவி, தியானம் செய்தார். பின்னர், தனுஷ்கோடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்றார். இதையடுத்து, தமிழ்நாட்டில் 3 நாள் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி வருகையால் அரிச்சல்முனை மேலும் பிரபலமடைந்துள்ளது. பிரதமர் மோடி வந்து சென்ற பிறகு அரிச்சல்முனைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். பிரதமர் மோடி மலர் தூவி வழிபட்ட கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.