தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% வேலைவாய்ப்பு வழங்க சட்டம் நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% வேலைவாய்ப்பு வழங்க சட்டம் நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

ஓசூர் அருகே அமைக்கப்பட்டு வரும் டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வெளிமாநிலத்தவருக்கு குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தவருக்கு அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இது குறித்த டாட்டா நிறுவனத்தின் விளக்கம் நிறைவளிக்கவில்லை.

டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மொத்தமுள்ள வேலைவாய்ப்புகள் 18,000. ஆனால்,தமிழகம் முழுவதும் அரசு சார்பில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2348 பேருக்கு மட்டுமே வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 80% தமிழர்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அந்நிறுவன நிர்வாகம் உறுதியளித்திருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்திருக்கிறார். ஆனால், அதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை.

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்வதற்கான அதிகாரம் தமிழக அரசிடம் உள்ளது. இதை தமிழக அரசே செய்ய முடியும் என்ற நிலையில், தனியார் நிறுவனங்கள் அளிக்கும் உத்தரவாதமற்ற உறுதிமொழிகளை நம்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும். அதற்காக, தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் சட்டத்தை வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




Next Story