தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 96 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 96 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 96 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பணியாளர்களுக்கு விடுமுறை
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் தேசிய விடுமுறை தினங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இல்லையென்றால் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும்.
அதன்படி சென்னை தொழிலாளர் ஆணையர் முதன்மை செயலாளர் அதுல்ஆனந்த், கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் மற்றும் நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் சுமதி ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில் தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர்கள், உதவி ஆய்வர்கள் ஆய்வு நடத்தினர்.
96 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
81 கடைகள், 56 உணவு நிறுவனங்கள், 12 மோட்டார் நிறுவனங்கள், 17 பீடி நிறுவனங்கள் என மொத்தம் 166 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 96 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த தகவலை நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளார்.