மாணவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை


மாணவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 13 July 2023 12:48 AM IST (Updated: 13 July 2023 4:25 PM IST)
t-max-icont-min-icon

18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

விழிப்புணர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அனைத்து பள்ளிகளிலும் செயல்படும் சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பள்ளியில் பயிலும் மாணவ -மாணவிகள் சாலை விதிகளை பின்பற்றி கவனமுடன் சாலையை கடப்பது குறித்தும், வாகனம் நின்று கொண்டிருந்தால் சாலையின் இருபுறமும் பார்த்து விழிப்புடன் சாலையை கடக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், சாலையின் ஓரமாக ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்களை கவனிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துக் கூற வேண்டும்.

பெற்றோர்கள் மீது நடவடிக்கை

18 வயதிற்கு கீழ் உள்ள மாணவ- மாணவிகள் மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு வாகனங்களை இயக்கினால் வாகனம் இயக்குபவருக்கோ அல்லது எதிர் தரப்பினருக்கோ ஏதேனும் விபத்து ஏற்பட்டால் பெற்றோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து மாணவ -மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சாலை விபத்தினால் உடல் ஊனமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டால் பெற்றோர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும். பள்ளி வளாகங்கள் மற்றும் பள்ளிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பது மற்றும் பயன்படுத்துவது தெரிந்தால் உடனடியாக 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், குற்றவியல் தாசில்தார் விஜயகுமார் மற்றும் பள்ளி சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story