கிண்டி ஆஸ்பத்திரி கட்டிடத்தில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கிண்டி ஆஸ்பத்திரி கட்டிடத்தில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

“சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் உள்ள முதியோர் ஆஸ்பத்திரி கட்டிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது போல இல்லை. இதில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்தார்.

அமைச்சர் ஆய்வு

சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல ஆஸ்பத்திரியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய முதியோர் ஆஸ்பத்திரி கிண்டியில் 2014-2015-ம் நிதியாண்டில் ரூ.151 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே பணிகள் முடிவுற்றது. இதுகுறித்து ஏற்கனவே நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது நேரமில்லாத நேரத்தில், 'கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கட்டப்பட்டுவரும் முதியோர் ஆஸ்பத்திரியில் அதிகாரிகள் ஆய்வு செய்திருக்கிறார்களா?' என்று கேட்டேன். அதற்கு, 'தரமாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது' என்று பதில் அளித்தனர். அந்த கட்டிடப்பணிகள் நிறைவடைந்த நிலையில் 200 படுக்கைகள் கொண்ட இந்த ஆஸ்பத்திரி 800 படுக்கைகள் கொண்ட கொரோனா ஆஸ்பத்திரியாக கடந்த ஆட்சியின்போது மாற்றப்பட்டது.

முறைகேடு நடந்திருந்தால்...

கொரோனா முடிவுக்கு வந்த நிலையில் தேசிய முதியோர் ஆஸ்பத்திரியாக மாற்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆஸ்பத்திரி, தேசிய முதியோர் ஆஸ்பத்திரியாக மாற்றப்படும் என்று சமீபத்தில் அறிவித்தோம். இந்த ஆஸ்பத்திரியை தரைதளம் உள்ளிட்ட 3 தளங்களிலும் ஆய்வு செய்து, புதியதாக எதையும் சேர்க்க வேண்டுமா? என ஆய்வு செய்தோம். இந்த கட்டிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆஸ்பத்திரி போல இல்லை. பல இடங்களில் காரைப் பிய்த்துக்கொண்டு கொட்டிக்கொண்டிருக்கிறது. இது சிமெண்டு பூச்சு போல் இல்லாமல் மண்ணில் பூசப்பட்டது போல் உள்ளது.

இந்த ஆஸ்பத்திரி முதியோருக்கு பாதுகாப்பாக இருக்குமா? என்பது சந்தேகமாக இருக்கிறது. எனவே உடனடியாக கட்டிடத்தின் தரத்தன்மை பற்றி ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளோம். வல்லுனர்களின் ஆய்வுக்கு பிறகு கட்டிடத்தின் தரத்தன்மை குறித்து சான்றிதழ் வழங்கியவுடன் 15 நாட்களுக்கு பிறகு இந்த ஆஸ்பத்திரி திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். இந்த கட்டிடப்பணிகளில் முறைகேடுகள் நடந்திருக்குமானால் சம்மந்தப்பட்டவர்கள் மீது முதல்-அமைச்சர் மூலமாக நடவடிக்கைகள் எடுப்பதற்கு வலியுறுத்த இருக்கிறோம். நிச்சயம் கட்டிடம் கட்டியவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஒமைக்ரான் பிஏ-4 வைரஸ் கண்டுபிடிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் உள்ள ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு ஒமைக்ரான் பிஏ-4 வகை வைரஸ் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது. அவர் தற்போது நலமாக பாதுகாப்பாக இருக்கிறார். அவரோடு தொடர்புடையவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதுபோல் எந்த வகையான வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்தும் தங்களைக் காத்துக்கொள்ள ஜூன 12-ந் தேதி நடைபெற உள்ள தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


Next Story