இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்


இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்
x

இலவச பாடப் புத்தகங்களை விற்பனை செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகோபால் மதுரை கலெக்டர் அனிஷ்சேகர் முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

பள்ளிக்கல்வித்துறையில் அடுத்தடுத்து செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக இந்த பயிற்சி முகாம்களில் ஆலோசிக்கப்பட்டது பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது,

பள்ளிக்கல்வித்துறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக இந்த பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இது பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் மதிப்பெண்களை கண்டு மனம் தளரக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமைகள் உண்டு.

எனவே மதிப்பெண் குறைந்த மாணவ மாணவிகள் தோல்வியடைந்து விட்டோம் என்ற விரக்தி அடையாமல் அடுத்த கட்டமாக தேர்வில் வெற்றி பெற்று தங்களது தனித்திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறினார்.

மேலும், அவர் கூறுகையில்,

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட 10 உபகரணங்கள் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். இதற்கு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வித் திறனை மேம்படுத்த முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாக எடுத்து வருகிறோம். தேசிய கல்விக் கொள்கையை விட நமது மாநிலத்தில் சிறந்த முறையில் மாணவர்களுக்கு கல்வியை போதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story