தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத 35 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத 35 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில் கரூர் முதல் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர் சரவணக்குமரன், இரண்டாம் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர் குமரக்கண்ணன் மற்றும் மணப்பாறை தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆகியோர்களுடன் கரூர் பகுதிகளில் மே தினமான கடந்த 1-ந்தேதி தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் தினமான மே 1 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து 60 நிறுவனங்களில் சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் 15 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 18 முரண்பாடுகளும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 2 முரண்பாடுகளும் என மொத்தம் 35 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. இந்த முரண்பாடுகள் கண்டறியப்பட்ட நிறுவனங்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகளின்படி கரூர் மாவட்டத்தில் செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய பண்டிகை விடுமுறை தினங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக தெரிவிக்க வேண்டும். தொடர் ஆய்வின் சமயம் முரண்பாடுகள் கண்டறியப்படும் பட்சத்தில் கேட்பு மனு தாக்கல் அல்லது அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தெரிவித்துள்ளார்.