திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு செய்யாத விடுதிகளை மூட நடவடிக்கை - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு செய்யாத விடுதிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பணிபுரியும் மகளிர் விடுதிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூலம் செயல்படுத்தப்படும் மாணவ-மாணவிகளின் விடுதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் தனியார் மகளிர் விடுதிகள், மதம் சார்ந்த நிறுவனங்கள், அறக்கட்டளை அல்லது சங்க பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்து மகளிருக்கான விடுதி நடத்துபவர்கள் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன் கீழ் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் செயல்படும் விடுதியின் நிர்வாகிகள் https://tnswp.com என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து கருத்துருக்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற 2-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யப்படாமல் செயல்படும் விடுதிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு செய்ய இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் கட்டிட உறுதி தன்மை சான்று, தீயணைப்பு துறையிடம் இருந்து தடையின்மை சான்று, சுகாதார அதிகாரி சான்று, உணவு பாதுகாப்பு அதிகாரி சான்று போன்றவை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.