மூடப்பட்ட கோவில்களை மீண்டும் திறக்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு உறுதி


மூடப்பட்ட கோவில்களை மீண்டும் திறக்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு உறுதி
x

மூடப்பட்ட கோவில்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

சென்னை

செல்போன் செயலி

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், ஒரு கால பூஜை திட்டத்தில் உள்ள கோவில் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்களின் வருகை மற்றும் ஆய்வு விவரங்களை பதிவேற்றம் செய்திடும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ''HRCE'' எனும் செல்போன் செயலியை (ஆப்) தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓலைச்சுவடிகள்

இந்து சமய அறநிலையத்துறையானது வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்திற்கேற்ப பல்வேறு மாறுதல்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கோவில்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் 'திருக்கோவில்' எனும் செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. கோவில்கள் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்கும் வகையில் 4 கோடி பக்கங்களை கொண்ட ஆவணங்கள் 'ஸ்கேன்' செய்யப்பட்டு ஆவணப்படுத்தும் பணி, ஓலைச்சுவடிகள் மற்றும் சுருணை ஓலைகளை பாதுகாத்து பராமரிக்கும் வகையில் தலைமையிடத்தில் ஆய்வு மையம் அமைக்கும் பணி போன்றவை நடைபெற்று வருகின்றன.

நிதானத்துடன் எடுத்து வைக்கிறோம்

அதைத்தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், ஒரு கால பூஜை அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்களின் வருகை மற்றும் ஆய்வு விவரங்களை புவி நிலை குறியீட்டு தகவல்களுடன் பதிவேற்றம் செய்யும் வகையிலான "HRCE" எனும் கைபேசி செயலி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவில்கள் ஆய்வு, திருவிழா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம், கோர்ட்டு நடவடிக்கைகள், உழவாரப்பணிகள், திருப்பணிகள் ஆய்வு போன்ற நடவடிக்கைகளை புகைப்படங்களாகவும், குரல் வழி செய்திகளாகவும் பதிவு செய்யவும், ஆவணங்களை பதிவேற்றவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தளவில் ஒவ்வொரு அடியையும் மிக கவனத்தோடு, நிதானத்துடன் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம். பக்தர்களின் நலன்களுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் இருந்து ஒரு நாளும் பின்வாங்க போவதில்லை. அதற்குண்டான ஆதாரங்களை திரட்டி கொண்டிருக்கிறோம்.

கோவில்களை திறக்க நடவடிக்கை

சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு புதிய யானைகள் வாங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கருத்து வேறுபாடுகள் காரணமாக மூடப்பட்டிருந்த கோவில்களை திறப்பதற்கு அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 9 கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 1997-ம் ஆண்டிற்கு பிறகு கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. பல்வேறு வகைகளில் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக 25 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலின் அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றி கட்டண உயர்வை செய்திருக்கிறார்கள். இது முதல்-அமைச்சரின் கவனத்திற்கு சென்றவுடன் கட்டணத்தை குறைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

முதல்-அமைச்சர் தலைமையில்...

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் சார்பில் நடத்தப்பட்டு வந்த கட்டணமில்லா திருமணங்கள் 12 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்தன. கடந்தாண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி 500 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இந்தாண்டு மானியக் கோரிக்கையில் 600 கட்டணமில்லா திருமணங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக வருகின்ற ஜூலை 7-ந்தேதி சென்னையில் முதல்-அமைச்சர் தலைமையில் மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில் திருமண மண்டபத்தில் 30 திருமணங்களும், பிற மாவட்டங்களில் 150-க்கும் மேற்பட்ட திருமணங்களும் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச்செயலர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அதிகாரி ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story