56 வயதிலும் சுறுசுறுப்பு... தமிழ்நாட்டின் சிறந்த யானையாக கும்பகோணம் மங்களம் தேர்வு


56 வயதிலும் சுறுசுறுப்பு... தமிழ்நாட்டின் சிறந்த யானையாக கும்பகோணம் மங்களம் தேர்வு
x

கடந்த 1982-ம் ஆண்டு, காஞ்சி மகாப்பெரியவர் மங்களம் என்று பெயரிட்டு ஒரு பெண் யானையை பரிசாக வழங்கினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவில் பிரளய காலத்தில் பின் முதலாவதாக தோன்றிய கோவில் ஆகும். மகாமக விழாவுக்கு முக்கிய தொடர்புள்ள இந்த கோவிலுக்கு கடந்த 1982-ம் ஆண்டு, காஞ்சி மகாப்பெரியவர் மங்களம் என்று பெயரிட்டு ஒரு பெண் யானையை பரிசாக வழங்கினார்.

தற்போது 56 வயதாகும் யானை மங்கலம் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் போது, பாசத்துடன் ஆசி வழங்குவதோடு மட்டுமின்றி கோவிலுக்கு வழக்கமாக வரும் பக்தர்களை நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் கொண்டது. யானை மங்களம் மிகவும் சுறுசுறுப்புடனுடம், அதை பராமரிக்கும் பாகன் அசோக் உடன் சேர்ந்து செல்போன் பார்ப்பது, விளையாடுவது, குழந்தைகளை கண்டால் குதூகலத்தில் பிளிறுவது உள்ளிட்ட பல்வேறு குறும்புத்தனங்களில் ஈடுபட்டு பக்தர்களின் மனதை கவரும்.

யானையின் இது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி முக்கிய இடம் பிடித்தது. இதனால் கும்பகோணத்துக்கு வரும் பக்தர்கள் யானை மங்களத்தை பார்க்காமல் செல்ல மாட்டார்கள். இந்த யானை குளிக்க கோவில் வளாகத்தில் ஒரு நீச்சல் குளமும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை மங்களத்துக்கு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்ட யானை மற்றும் சுறுசுறுப்பான யானைக்கான சிறப்பு விருதை, மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற புதுடெல்லியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான லோக்தந்த்ரா அவுர் ஜனதா அமைப்பு வழங்கி உள்ளது.

நேற்று இந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சுதன் பாலன், அஜீத்குமார் ஆகியோர் ஆதிகும்பேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் கோ.கிருஷ்ணக்குமார் மற்றும் யானை பாகன் அசோக்கிடம் விருது மற்றும் நினைவு பரிசை வழங்கினர். இதுகுறித்து லோக் தந்திரா அவுர் ஜனதா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சுதன் பாலன், அஜித்குமார் ஆகியோர் கூறியதாவது:-

'நாங்கள் தமிழ்நாட்டில் உள்ள யானைகளை பராமரிக்கும் விதம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். இதில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான யானை மங்களம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, ஆரோக்கியத்துடன் உள்ளது. இதனால் யானை மங்களத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தனர்.


Next Story