அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு கூடுதல் தொகையை ரத்து செய்ய வேண்டும்


அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு கூடுதல் தொகையை ரத்து செய்ய வேண்டும்
x

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு கூடுதல் தொகையை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகள் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை

அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் புதுக்கோட்டை போஸ் நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பெற்ற பயனாளிகள் பலர் மனு கொடுக்க வந்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், ``வீடுகள் ஒதுக்கிய போது பயனாளிகளிடம் ரூ.1 லட்சம் பெற்ற நிலையில் தற்போது கூடுதலாக ரூ.50 ஆயிரம் தொகை செலுத்த வேண்டும் எனவும், செலுத்தாவிட்டால் பயனாளிகளுக்கு வீடுகள் கிடையாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களால் அவ்வளவு பணம் செலுத்த முடியாத நிலையில், கூடுதல் தொகையை ரத்து செய்ய வேண்டும் அல்லது விலக்களிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

294 மனுக்கள்

அனவயல் லட்சுமி நரசிம்மபுரத்தை சேர்ந்த பரிமளா அளித்த மனுவில், தான் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருவதாகவும், தனது 2 மகன்களும் மாற்றுத்திறனாளியாக உள்ளதாகவும், கணவர் இறந்து விட்டதால் குறைவான ஊதியத்தை வைத்து மகன்களை பராமரிப்பதாகவும், தற்காலிக வேலையை பணி நிரந்தரம் செய்து தரக்கோரி கூறியிருந்தார். இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 294 மனுக்கள் பெறப்பட்டன.

அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் இயற்கை மரண ஈமசடங்கு நிதி 19 பயனாளிகளுக்கு தலா ரூ.17,000 வீதம் ரூ.3,23,000 -க்கான காசோலைகளையும், ஒரு பயனாளிக்கு நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் ரூ.1,000 கல்வி உதவித்தொகையினையும், 3 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புடைய உதவி உபகரணங்களும் என மொத்தம் 23 பயனாளிகளுக்கு ரூ.3,44,000 மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்.

நிவாரண நிதி

மேலும், திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டி பலியான அரவிந்த், கல்லூர் மஞ்சுவிரட்டில் பலியான சுப்பிரமணியன் ஆகியோரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.6 லட்சத்திற்கான காசோலைகளை, வாரிசுதாரர்களிடம் கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார். இக்கூட்டத்தில், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story