விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் தீர்ப்பு ஒத்தி வைப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை


விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் தீர்ப்பு ஒத்தி வைப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
x

பாதிக்கப்பட்டவர்களிடம் மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.அமுதா 2 கட்டங்களாக விசாரணை நடத்தியிருந்தார்.

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்துறை கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை கற்களால் உடைத்தும், பிடுங்கியும் சித்திரவதை செய்ததாக ஏ.எஸ்.பி பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக முதற்கட்டமாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சபீர் ஆலம் விசாரணை நடத்தினார். பாதிக்கப்பட்டவர்களிடம் மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.அமுதா 2 கட்டங்களாக விசாரணை நடத்தினார். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்து, விசாரணையை முடித்த சி.பி.சி.ஐ.டி போலீசார், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் இருந்தனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதி காவல் நிலையத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். மற்றும் நெல்லை சார் ஆட்சியர் ஆகியோர் நடத்திய விசாரணையின் அறிக்கைகளை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது , தமிழக அரசு தரப்பில், ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீதான விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையும், விசாரணை அறிக்கையும் கோர்ட்டில் விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணைக்காக பல்வீர் சிங் உட்பட 17 பேர் நேரில் ஆஜராகினர். இதில் அரசு தரப்பில் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யப்படாத காரணத்தினால், இந்த வழக்கின் தீர்ப்பை மீண்டும் ஒத்தி வைத்து நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story