அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு


அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
x

செம்மன் குவாரி வழக்கு விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி ஆஜரான நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம்,

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சியின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக, அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதைகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இதையடுத்து மீதம் உள்ள 7 பேர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி, சதானந்தன், கோதைகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் உள்ளிட்ட 6 பேர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை வரும் 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story