திருச்சி மருத்துவமனையில் முத்தரசன் அனுமதி


திருச்சி மருத்துவமனையில் முத்தரசன் அனுமதி
x

திருச்சி மருத்துவமனையில் முத்தரசன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி

மாநில செயலாளர் முத்தரசன்

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தமிழ்நாடு 15-வது மாநில மாநாடு திருச்சியில் கடந்த 3-ந்தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளை கவனித்து கொள்வதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் திருச்சிக்கு நேற்று முன்தினம் வந்து பெரிய மிளகுபாறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தங்கி இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை அவருக்கு சளி அதிகரித்து, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரை சந்தித்து உடல்நிலை குறித்து பரிசோதித்தார். அப்போது, உடல் நிலையில் பாதிப்பு ஏதும் இல்லை. ஓய்வு அவசியம் என்று டாக்டர்கள் கூறி, சில மருந்துகள் பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து தான் தங்கி இருந்த அறைக்கு சென்று ஓய்வு எடுத்தார்.

உடல் நலக்குறைவு

இந்தநிலையில் மாலை 5 மணிக்கு மேல் அவருக்கு தொடர்ந்து விக்கல் வந்து கொண்டிருந்தது. மேலும் அவர் வாந்தி எடுத்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக அவரை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி மத்திய பஸ்நிலைய பகுதியில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாலை 6 மணிக்கு கட்சி நிர்வாகிகள் அழைத்து சென்றனர்.

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனை முடிவுகளை பார்த்த டாக்டர்கள், ஓய்வும், தூக்கமும் குறைந்ததால், உடல் பலவீனப்பட்டு, சர்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் சிறிது அதிகரித்துள்ளது. இதனால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மருத்துவமனையில் அனுமதி

மேலும், இரண்டொரு நாட்கள் அவருக்கு முழுமையான ஓய்வு அவசியம் என்றும், மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறும் டாக்டர்கள் அவருக்கு அறிவுரை கூறினர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு காவேரி மருத்துவமனையிலேயே முத்தரசன் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருடைய உடல் நிலை சீராக உள்ளது.

முதல்-அமைச்சர் நலம் விசாரித்தார்

இதுபற்றி அறிந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு முத்தரசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். நேற்று காலை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று முத்தரசனிடம் நலம் விசாரித்தார்.இந்தநிலையில், ரா.முத்தரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டனர். முத்தரசன் உடல் நலம் சீராக இருப்பதாகவும், அவர் ஓய்வெடுக்க உதவும் வகையில் மருத்துவமனைக்கு கட்சியினர் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், வேறு கவலைப்படும்படி ஒன்றும் இல்லை என்றும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச்செயலாளர் நா.பெரியசாமி தெரிவித்துள்ளார்.


Next Story