2026-ம் ஆண்டில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் - ஜெயக்குமார் பேட்டி
2026-ம் ஆண்டில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வினியோகம் நேற்று முதல் தொடங்கியது. அதன்படி முதல் நாளான நேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, பெஞ்சமின், மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, பாலகங்கா உள்ளிட்டோர் விண்ணப்பம் வாங்கினர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொடி பிடிக்கும் தொண்டனுக்கு பதவி கொடுத்து, கொடிகட்டிய காரில் செல்ல வைத்து அழகுபார்க்கும் கட்சி அ.தி.மு.க. தான். எனவே இங்கு வாரிசு அரசியல் கிடையாது. ஜெயவர்தன் மனு விண்ணப்பித்திருப்பது வாரிசு அரசியல் என்று கூற முடியாது. 2014-ம் ஆண்டில் பொதுச்செயலாளரான ஜெயலலிதா தான் அவரது படிவத்தில் கையெழுத்திட்டார். அவரும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
2019-ல் வெறும் 8 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தென்சென்னை தொகுதியில் தோல்வியடைந்தார். அதன்பிறகு தொடர்ந்து விடாமுயற்சியுடன் கட்சி பணியாற்றி வரும் அவர் சீட் கேட்டது எப்படி வாரிசு அரசியலாக முடியும்? ஆனால் தி.மு.க.வில் அப்படி அல்ல. கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின், அவருக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின், அவருக்கு பிறகு இன்பநிதி என்ற மன்னராட்சி முறை தான் உள்ளது. ஏற்கனவே தி.மு.க.வை எம்.ஜி.ஆர். வனவாசம் அனுப்பினார். இந்த சட்டமன்ற தேர்தலில் மட்டும் நாங்கள் வெற்றி பெற்று இருந்தால் தி.மு.க. வனவாசம் போயிருக்கும்.
2026-ம் ஆண்டில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வருவார். அந்த சூழலில், இனி தி.மு.க.வுக்கு நிரந்தரமாக வனவாசம் தான். அதன்பிறகு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரவே முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.