விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் முன்னாள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலையில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் முன்னாள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வையும், அனைத்து துறைகளிலும் ஊழல் சீர்கேட்டினையும் கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., முக்கூர் சுப்பிரமணியன், எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-
சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற தவறுகளை மத்திய அரசு உற்று நோக்கி கொண்டிருக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கிற சூழலை மத்திய அரசு இன்றைக்கு கையில் எடுத்து உள்ளது.
இன்னும் 6 மாத காலத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலும் நடப்பதற்கான சூழ்நிலை நடைபெற்று கொண்டிருக்கிறது.
நடுநிலையோடு...
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. ஊராட்சி மன்றத்தலைவர்கள் மீதும், அ.தி.மு.க. ஒப்பந்ததாரர்கள் மீதும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே கலெக்டரும், அவருக்கு கீழ் செயல்படும் அலுவலர்களும் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் போது யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்க உள்ளார் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
அதேபோல் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது. இந்த மாவட்டத்தில் போடப்படும் அத்தனை பொய் வழக்குகளையும் அ.தி.மு.க. நேர்மையோடு எதிர்கொள்ளும்.
இன்றைக்கு பொதுமக்கள் பயன்படுத்துக்கிற காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் உள்ள முதல்-அமைச்சா் விலை உயர்வை தடுப்பதற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் எந்த துறையை எடுத்து கொண்டாலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
ரூ.1000 வழங்கும் திட்டத்தில்...
ரூ.1000 வழங்கும் திட்டத்தில் கலெக்டர் நேர்மையோடு நடந்து கொள்ள வேண்டும். தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் ரூ.1000 கிடைப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் நடுநிலையோடு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளர் அமுதா, துணைச் செயலாளர் மகேந்திரன், மாவட்ட ஆவின் தலைவர் பாரி பி.பாபு, மாவட்ட பொருளாளர் நைனாகண்ணு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் குணசேகரன், இலக்கிய அணி செயலாளர் பர்குணகுமார், திருவண்ணாமலை நகர செயலாளர் செல்வம், அமைப்புசாரா ஓட்டுனர் அணிசெயலாளர் சுனில்குமார்,
அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனி, ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் ஆறுமுகம், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் ஜெயசுதா, மனோகரன், கலியபெருமாள், தொப்பளான், ராமச்சந்திரன், வழக்கறிஞர் பிரிவு சஞ்சீவிராமன் மற்றும் திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கிளை நிர்வாகிகள், வட்டச் செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.