ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x

தா.பழூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஒன்றியக்குழு கூட்ட மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி வீரமணிகண்டன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர் அண்ணாதுரை பேசுகையில், ஒன்றியத்தில் பல்வேறு திட்ட பணிகளை ஒப்பந்ததாரர்கள் செய்து முடித்தும், அதற்கான தொகையை வழங்காதது ஏற்புடையது அல்ல. இதனால் வார்டுகளில் அனைத்து பணிகளும் மந்த நிலையில் உள்ளது, என்றார். கவுன்சிலர் எழிலரசன் பேசுகையில், கிராமங்களில் உள்ள தெரு சாலைகள் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளதால், அவற்றை சீரமைக்கும் பணிகளுக்கு நிதி வழங்க வேண்டும். அரசு கொடுக்கும் நிதி கிராமப்புற கட்டமைப்புகளுக்கு போதுமானதாக இல்லை. மக்களை நேரடியாக சந்திக்க முடியாத நிலை கவுன்சிலர்களுக்கு ஏற்படுகிறது, என்றார்.

கவுன்சிலர் அசோகன் பேசுகையில், பொன்னார் பிரதான வாய்க்காலில் கடந்த சில நாட்களாக சம்பா பருவ நடவிற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த வாய்க்காலின் தலைப்பு பகுதி அருகே கொள்ளிடம் ஆற்றில் வைப்பூர்-வாழ்க்கை இடையே கதவணை அமைக்க கடந்த ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணம் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். எனவே மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. மற்றும் கூட்டணியை சேர்ந்த கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி வெளிநடப்பு செய்தனர். அவருடன் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த மேலும் 5 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய கணக்கர் அரியதங்கம் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அன்புசெல்வன் நன்றி கூறினார்.


Next Story