செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்


செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
x

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி அ.தி.மு.க. சார்பில் வருகிற 21-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்துள்ளார். அப்போது இவர், டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செந்தில்பாலாஜி மீது 3 குற்ற வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை கடந்த 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த 13-ந்தேதி நள்ளிரவு செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஐகோர்ட்டு உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க வேண்டும் என்ற செந்தில்பாலாஜியின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்றும், அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி எஸ். அல்லி தனது உத்தரவில் தெரிவித்து உள்ளார். இதனால், அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி அமலாக்கத்துறை கோரியிருந்தது. இதன் மீது நடந்த விசாரணையில், நேற்று முதல் வருகிற 23-ந்தேதி வரை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி அ.தி.மு.க. சார்பில் வருகிற 21-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

இதன்படி, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. வருகிற புதன்கிழமை காலை 10 மணியளவில், வருவாய் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தலைமை கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம் மற்றும் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டு உள்ளார்.


Next Story