அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு


அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 5 July 2022 6:20 AM GMT (Updated: 5 July 2022 6:59 AM GMT)

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அதிமுகவின் பொதுக்குழு வரும் ஜூலை11ஆம் தேதி நடைபெறும் என்று கூறி அதற்கான ஏற்பாடுகளில் முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் அணியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

மற்றொரு புறம், பொதுக்குழு கூடுவதற்கு அறிவிப்பு கொடுத்துள்ளது செல்லாது என்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வத்தின் ஒப்புதல் இருந்தால்தான் அந்த கூட்டத்தை நடத்தமுடியும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று அதிகரித்தால், அதிமுக பொதுக்குழுவை இணையத்தில் நடத்துவது பற்றிய ஆலோசனையிலும் எடப்பாடி பழனிசாமி அணியினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என்பதில் தீவிரமாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அணி, வருகிற ஜூலை 11ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்ட பொதுக்குழு சட்டத்திற்கு புறம்பானது என்றும் அதற்கு தடை விதிக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த சூழலில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து தனி நீதிபதி முன் முறையிட்டார் ஓ.பன்னீர் செல்வம். அவசர வழக்காக எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வரும் 11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் கட்சியின் கணக்கு வழக்குகளை பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் சமர்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story