அ.தி.மு.க. பெயர், கொடியை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பயன்படுத்த எதிர்ப்பு


அ.தி.மு.க. பெயர், கொடியை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பயன்படுத்த எதிர்ப்பு
x

அ.தி.மு.க. பெயர், கொடியை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி

அ.தி.மு.க. பொதுச்செயலாளர்

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரட்டை தலைமை இருந்து வந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்தது. திரளான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்கவே, அவர் பொதுக்குழுவை கூட்டி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றினார். அத்துடன், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கி, தற்காலிக பொதுச்செயலாளர் ஆனார்.

அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதை தேர்தல் ஆணையமும் கடந்த 2 நாட்களுக்கு முன் அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டது.

திருச்சியில் மாநாடு

இதற்கிடையே தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பின்னடைவாக இருந்தாலும், தனது செல்வாக்கை காட்ட ஏற்கனவே திட்டமிட்டபடி திருச்சி ஜி-கார்னர் மைதானத்தில் தனது ஆதரவாளர்களின் மாநாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஏற்பாடு செய்துள்ளார். நாளை (திங்கட்கிழமை) முப்பெரும் விழா என்ற பெயரில் அந்த மாநாடு நடைபெறுகிறது.

இதற்காக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மாநாடு நடைபெறும் இடத்தில் அ.தி.மு.க.வின் கட்சி கொடி, சின்னம் போன்றவற்றை பயன்படுத்தி விளம்பர பதாகைகள் வைத்துள்ளனர். அத்துடன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அழைக்கிறார் என்றும் கட்-அவுட் மற்றும் விளம்பர பதாகைகள் வைத்துள்ளனர்.

அ.தி.மு.க.வினர் முற்றுகை

இந்தநிலையில் அ.தி.மு.க. கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். இதற்காக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.முக. செயலாளர் குமார் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமாரிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-திருச்சி ஜி-கார்னர் மைதானத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் வருகிற 24-ந்தேதி (நாளை) நடத்த உள்ள மாநாட்டில் அ.தி.மு.க. கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது.

ஏற்கனவே நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுவிட்டனர். இந்த பொதுக்குழு தீர்மானங்களை நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அ.தி.மு.க.விற்கு தொடர்பு இல்லாத இவர்கள் அ.தி.மு.க.வின் கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. அதனை அப்புறப்படுத்த வேண்டும்.

கிரிமினல் நடவடிக்கை

பொது மக்களையும் அ.தி.மு.க.வினரையும் குழப்பும் வகையிலும், அரசியல் செய்ய இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 1860 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 2000 ஆகியவற்றின்படி வழக்குப்பதிவு செய்து அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட துணை கமிஷனர், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

1 More update

Next Story