அ.தி.மு.க.வினர் சாலைமறியல்- ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்தது
எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூர் மாவட்ட பகுதிகளில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூர் மாவட்ட பகுதிகளில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை விவகாரத்தில் சபாநாயகரின் முடிவை கண்டித்து முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று சென்னையில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்தனர். எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூர் பழைய பஸ் நிலையம் பெரியார் சிலை ரவுண்டானா அருகில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
போராட்டத்திற்கு நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், செந்தில்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள், வர்த்தக அணி செயலாளர் ரெயில் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதனையடுத்து திருவாரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வலங்கைமான்
முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் சட்டசபை மரபை மீறி வெளியேற்றியதை கண்டித்தும், அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள கும்பகோணம்-மன்னார்குடி மெயின் சாலையில் ராமர் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவரும், அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளருமான சங்கர் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் இளவரசன், நகர செயலாளர் குணசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் பிரபாகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜமோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை வலங்கைமான் போலீசார் கைது செய்தனர். போராட்டம் காரணமாக கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீடாமங்கலம்
எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து நீடாமங்கலத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு நீடாமங்கலம் நகர அ.தி.மு.க. செயலாளர் ஷாஜஹான் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் மணலூர் ராஜேந்திரன், ஆதிஜனகர், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வீரையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூத்தாநல்லூர்
எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி நான்கு வழிச்சாலையில் அ.தி.மு.க.வினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நகர செயலாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினரை கூத்தாநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
கோட்டூர்
எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோட்டூர் பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர்கள் ஜீவானந்தம், ராஜா சேட் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
முத்துப்பேட்டை
எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் நகர செயலாளர் மங்கள் அன்பழகன் தலைமையிலும், பாண்டி கடைத்தெருவில் ஒன்றிய துணை செயலாளர் பாரதிதாசன் தலைமையிலும் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 2 இடங்களிலும் 42 பேர் கைது செய்யப்பட்டனர்.