அ.தி.மு.க. எக்ஸ்பிரஸில் நம்பி ஏறுகிறவர்கள் டெல்லி செல்வார்கள் - செல்லூர் ராஜூ பேட்டி


அ.தி.மு.க. எக்ஸ்பிரஸில் நம்பி ஏறுகிறவர்கள் டெல்லி செல்வார்கள் - செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 18 Nov 2022 9:21 AM GMT (Updated: 18 Nov 2022 9:30 AM GMT)

தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு சிறந்த மாலுமியாக கேப்டனாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார் என செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை:

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராபட்டி பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் பாலம் மற்றும் பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்து தமிழக மக்களுக்கு சேவை ஆற்றியுள்ளேன்.

என்னை உலகறிய செய்ய சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மதுரை மேற்கு தொகுதி மக்களுக்கு நானும் என் குடும்பமும் உயிர் உள்ள வரை சேவையாற்றுவோம்.

மதுரை நகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. கொடிமங்கலம் பகுதியில் ரூ.17 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டதால் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தற்போது தேனூர் பகுதியில் ரூ.26 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைந்து பணியை செய்வதாக அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியை திறம்பட நடத்தி வருகிறார்.

தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு சிறந்த மாலுமியாக கேப்டனாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளும் திறம்பட செயல்பட்டன. குறிப்பாக கூட்டுறவுத் துறையில் எவ்வித தவறும் இன்றி சிறப்பாக மக்களுக்கு சேவை செய்யப்பட்டன.

நான் அமைச்சராக பொறுப்பு வகித்த 10 ஆண்டுகளில் இரண்டு முறை நேர்மையாக கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடத்தப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் குத்து வெட்டும் நடந்ததால் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவதையே கைவிட்டு விட்டார்.

ஆனால் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொடுத்த உத்வேகம் காரணமாக இரண்டு முறை சிறப்பான முறையில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தினோம். கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டதால் 27 விருதுகளை பெற்றோம்.

அ.தி.மு.க. ஆட்சியில் ரேஷன் கடைகளில் தரமான பொருள்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் கூட பொதுமக்களுக்கு நேர்மையான முறையில் தரமான பொருட்களை விநியோகம் செய்யப்பட்டன. தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆயிரம் பொய் சொல்லி திருமணத்தை நடத்த வேண்டும் என்பார்கள். ஆனால் லட்சக்கணக்கில் பொய் சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது.

ஆனால் இந்த ஆட்சி மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இனி எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க.-தி.மு.க. என்கிற திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி அமைக்க முடியும்.

இப்போது அ.தி.மு.க. என்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லி நோக்கி புறப்பட்டு விட்டது. இதை நம்பி ஏறினால் டெல்லி செல்வார்கள். இல்லாவிட்டால் வீட்டில் இருப்பார்கள்.

அ.தி.மு.க.வை பொருத்தவரை எங்களை நம்பி வருபவர்களை கை தூக்கி விடுவோம். தமிழகத்தில் அ.தி.மு.க.வை பின் தள்ளிவிட்டு பாரதிய ஜனதா ராட்சசன் ஆக வளர்ந்து வருவதாக தி.மு.க. மூத்த அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பது பாரதிய ஜனதா அரசு மீது துரைமுருகனுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை காட்டுகிறது.

அ.தி.மு.க. என்றைக்கும் தமிழகத்தில் முதன்மையான இயக்கமாகும். தி.மு.க.வை ஓட ஓட விரட்டக்கூடிய லட்சக்கணக்கான ராணுவ படையை கொண்ட ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.

தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது அன்றைய சூழ்நிலையை பொறுத்து அமையும். 2014 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற இயக்கம் அ.தி.மு.க.

கடந்து 2019 தேர்தலை வைத்து எதையும் கணிக்க கூடாது. தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு தேர்தலிலும் மாறக்கூடியது தான். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கும் என்பது அப்போது தான் தெரியும். அ.தி.மு.க.வை பொறுத்தவரை இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கட்டுக்கோப்பாக வழி நடத்தி வருகிறார்.

அ.தி.மு.க.விலிருந்து சிலர் விலகி இருக்கிறார்கள். அவர்களும் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினால் தீர்வு கிடைக்கும். அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சேருவது குறித்து காலம்தான் பதில் சொல்லும். அ.தி.மு.க.வை நம்பி வருகிற யாரையும் நாங்கள் கைவிட மாட்டோம். கை தூக்கி விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story