11-ந்தேதி மீண்டும் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்


11-ந்தேதி மீண்டும் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்
x

11-ந்தேதி மீண்டும் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் எதிரும், புதிருமாக உள்ளனர். கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்க அவரது ஆதரவாளர்கள் போட்ட திட்டத்தை நீதிமன்றத்தை நாடி ஓ.பன்னீர்செல்வம் முறியடித்தார்.

எனவே அன்றைய தினம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. அதே நேரத்தில் ஜூலை 11-ந்தேதி மீண்டும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூடி, ஒற்றை தலைமையை தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் 11-ந்தேதி மீண்டும் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது. இதையடுத்து சென்னையை அடுத்த வானகரத்தில் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு மேற்கொண்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் வேளையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் தடை ஏதேனும் விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை எதுவும் இல்லை. சமூக இடைவெளி, முககவசம் போன்ற கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து கூட்டத்தை நடத்த வேண்டும். அவர்கள் கட்சிக்காரர்களை அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறோம்' என்று கருத்து தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடித்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 2,665 பொதுக்குழு உறுப்பினர்கள் நெருக்கமாக நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தனர். தற்போது ஒவ்வொரு உறுப்பினர்களும் 2 அடி இடைவெளிவிட்டு அமர வைக்கப்பட உள்ளனர். இதற்காக மண்டபத்துக்கு வெளியேயும் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுக்குழு கூட்டத்துக்கு வரும் உறுப்பினர்களுக்கு முககவசம், சானிடைசர் போன்றவைகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story