குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
கடலூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது
கடலூர்
ஒவ்வொரு வருடமும் ஜூன் 12-ந் தேதி உலகளவில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மாநகராட்சி மேயர் சுந்தரி முன்னிலையில், அரசு அலுவலர்கள் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். அதனை தொடர்ந்து குழந்தை தொழிலாளர்கள் முறை அகற்றுவதற்கான கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். இதில் தொழிலாளர் உதவி ஆணையர்கள் ராஜசேகரன், ராமு, தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட அளவிலான பணிக்குழு உறுப்பினர்களுடன் மாவட்டம் முழுவதும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தொடர்பாக கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர அனைத்து தொழிலாளர் உதவி ஆய்வாளர்களும், கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தனர்.