கோவில், பள்ளி அருகில் உள்ள மதுக்கடைகளை மூட ஆலோசனை -அமைச்சர் முத்துசாமி பேட்டி


கோவில், பள்ளி அருகில் உள்ள மதுக்கடைகளை மூட ஆலோசனை -அமைச்சர் முத்துசாமி பேட்டி
x

கோவில், பள்ளிக்கூடங்களின் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு ஆலோசனை நடத்தப்படுகிறது என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

ஈரோடு,

டாஸ்மாக் மதுக்கடைகளில் பல பிரச்சினைகள் உள்ளன. அதை சீர்திருத்தம் செய்ய, ஒழுங்குபடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படித்தான் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகளை கேட்டு தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆனால் நல்ல கருத்துகளை கூறாமல், பலர் விமர்சனங்கள் செய்கின்றனர். எங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு நல்ல கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.

18 டாஸ்மாக் தொழிற்சங்கங்களை விரைவில் அழைத்து பேசி, அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பார் ஏலம்

டாஸ்மாக் மதுக்கடைகள் குறைந்தது 500 சதுர அடி பரப்பளவுக்கு மேல் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் பல கடைகள் மிகவும் குறுகலான இடத்தில் இருப்பதால், ஊழியர்களே அமர முடியாத நிலையில் சிரமப்படுகின்றனர். டாஸ்மாக் கடைகளின் பார் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்புக்கு பிறகு ஏலம் விடுவது குறித்து முடிவு செய்யப்படும். அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பான புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

டாஸ்மாக் மதுக்கடையின் வருவாயை உயர்த்துவதற்காக ஆலோசனை நடத்தப்படுவதாகவும், கருத்து கேட்கப்படுவதாகவும் கூறுவது தவறானது. 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. கோவில், பள்ளிக்கூடங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு ஆலோசனை நடத்தப்படுகிறது. டாஸ்மாக் தொடர்பாக எந்த நல்ல யோசனைகளை, யார் சொன்னாலும் பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.


Next Story