அடையாறு ஆற்றில் மே மாதம் சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம் - மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்


அடையாறு ஆற்றில் மே மாதம் சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம் - மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்
x

அடையாறு ஆற்றின் கீழ் ‘காவேரி’ எந்திரத்தின் மூலம் சுரங்கம் தோண்டும் பணி வருகிற மே மாதம் தொடங்க இருக்கிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

சென்னை

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து 2-வது கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடியில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த திட்டத்தில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 3-வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரமும், 4-வது வழித்தடம் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரமும், 5-வது வழித்தடம் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள பூங்காவில் இருந்து சுரங்கம் தோண்டும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. 'காவேரி' என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் எந்திரம் (டணல் போரிங் எந்திரம்) பணியில் ஈடுபட்டு உள்ளது. மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை உள்ள 3-வது வழித்தடம் சென்னையின் வடக்கு, மத்திய, தென் சென்னையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக பார்க்கப்படுகிறது.

இவற்றில், அடையாறு, மயிலாப்பூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய இடங்களை இணைக்கும் விதமாக இந்த வழித்தடம் அமையவுள்ளது. முதல் கட்டமாக, மாதவரம் பால் பண்ணை பகுதியில் முதல் சுரங்கம் தோண்டும் எந்திரம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பணியை தொடங்கியது.

கிரீன்வேஸ் சாலை சந்திப்பில் உள்ள பூங்காவில் இருந்து சுரங்கம் தோண்டும் எந்திரம் தரை மட்டத்தில் இருந்து சுமார் 70 அடி ஆழத்தில் 60 மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் தோண்டி உள்ளது. அதாவது கிரீன்வேஸ் சாலையை கடந்து அடையாறு ஆறு நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இன்னும் 240 மீட்டர் தூரம் சென்றால் அடையாறு ஆற்றங்கரையை தொடும். தொடர்ந்து 400 மீட்டர் நீளம் கொண்ட அடையாறு ஆற்றை வருகிற மே மாதம் தோண்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணி வருகிற ஜூலை மாதம் நிறைவடையும்.

அதற்கு பிறகு அடையாறு ஜங்சனில் இந்த சுரங்கம் தோண்டும் பணி நிறைவடையும். எப்படியும் வருகிற நவம்பர் மாதம் இந்தப்பணி முழுமையாக நிறைவடையும். இந்த நிலையில் அடையாறு ஜங்சனில் ரெயில் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட உள்ளது. சுரங்கம் தோண்டும் பணிக்கு இடையே சுரங்கத்தில் மெட்ரோ ரெயில் அமைப்பதற்கான பணிகளும் நடந்து வரும் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.


Next Story