ஒரு நாள் மழைக்கே, மதுரை தத்தளிக்கிறது-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி


ஒரு நாள் மழைக்கே, மதுரை தத்தளிக்கிறது-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
x

ஒரு நாள் மழைக்கே மதுரை தத்தளிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை

.

ஆய்வு கூட்டம்

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை தொடர்வதற்கு முன்பாகவே மதுரையில் பெய்த மழையின் காரணமாக கார், இருசக்கர வாகனங்களை மூழ்கடிக்கும் அளவிலேயே சாலைகளில் தண்ணீர் ஓடியது. அதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் திரும்ப முடியாமல் பலரது வாகனங்கள் தண்ணீரிலே மூழ்கி செயலிழந்தது. அதற்கு சாட்சியாக சிலர் வாகனத்துடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்றது.

மதுரையின் மையப் பகுதியான சிம்மக்கல், பழங்காநத்தம், டி.வி.எஸ். நகர், மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகள், செல்லூர், தமுக்கம், புதூர் போன்ற பகுதிகளில் சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடியது. ஒரு நாள் மழைக்கே கோவில் மாநகர் மதுரை தாங்கவில்லை என்றுதான் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். மழைநீர் வடிகாலை முறைப்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைகையாற்றின் வரத்து கால்வாய்கள், கண்மாய்கள், குளங்களை தூர்வாரி தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும் சோழவந்தான் பகுதியில் வீடு இடிந்தது அதிர்ஷ்டவசமாக சிலர் உயிர் தப்பி உள்ளனர். வடகிழக்கு பருவமழை குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு கூட்டத்தை ஏற்கனவே நடத்தியுள்ளார். ஆனால் அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செயல்படுத்தப்பட்டு உள்ளதா?

வடகிழக்கு பருவ மழை

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது அனைத்து வருவாய் மாவட்டங்களில் மழைக்காலங்களுக்கு முன்பாக நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஒரு நாள் மழைக்கு கூட மதுரை தாங்கவில்லை. நான் பல்வேறு இடங்களில் நேரில் சென்று பார்த்தேன். சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக உள்ளது. தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளது. அரசு செயல்படுகிறதா என்று தெரியவில்லை. சாலைகள் எல்லாம் சீர் செய்ய வேண்டும். அதேபோல் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Related Tags :
Next Story