தஞ்சையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


தஞ்சையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

இந்தி மொழியை திணிக்கும் மத்தியஅரசின் முயற்சியை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

இந்தி மொழியை திணிக்கும் மத்தியஅரசின் முயற்சியை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இந்தி மொழி திணிப்பையும், ஒரே நுழைவுத்தேர்வையும் திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்தியஅரசை கண்டித்தும் தஞ்சை தலைமை நிலையம் முன்பு தஞ்சை வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், மேயருமான சண்.ராமநாதன் வரவேற்றார். வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

இதில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் து.செல்வம், மகேஷ் கிருஷ்ணசாமி, கும்பகோணம் மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன், தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி, வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில்குமார் உள்பட தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டு இந்தி மொழியை திணிக்கும் மத்தியஅரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில், மத்தியமந்திரி அமித்ஷா அலுவலக மொழி தொடர்பாக அளித்திட்ட அறிக்கையை திரும்ப பெற வேண்டும். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு என்ற கொள்கையை பா.ஜ.க. கைவிட வேண்டும். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியா முழுவதும் இந்தி மொழியை திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

மத்திய அரசு நடத்துகின்ற பள்ளி, கல்லூரி நிறுவனத்தில் கட்டாய மொழியாக இந்தியை திணிக்கக்கூடாது. மத்தியஅரசின் பணிக்காக நடத்தப்படும் தேர்வில் இந்தியை திணிக்கக்கூடாது. அலுவலக மொழியாக உள்ள ஆங்கிலமொழியை ஒழிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முடிவில் மத்திய மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தமிழ்செல்வன் நன்றி கூறினார்.


Next Story