'அக்னிபத்' திட்டத்தின் கீழ் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் - வேலூரில் நவம்பர் 15-ந்தேதி தொடங்குகிறது


அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் - வேலூரில் நவம்பர் 15-ந்தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 5 Aug 2022 6:57 AM GMT (Updated: 5 Aug 2022 6:59 AM GMT)

'அக்னிபத்' திட்டத்தின் கீழ், ராணுவத்துக்கு அக்னி வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

சென்னை:

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

'அக்னிபத்' திட்டத்தின் கீழ், ராணுவத்துக்கு அக்னி வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்சேர்ப்பு முகாம், வேலூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நவம்பர் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட புதுச்சேரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம்.

அக்னிவீர் பொதுப்பணி, அக்னிவீர் தொழில்நுட்பப் பணி, எழுத்தர், பண்டகக் காப்பாளர் மற்றும் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அவரவர் தகுதிக்கேற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள், www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலமாக ஆகஸ்டு 5-ந்தேதி (இன்று) முதல் செப்டம்பர் 3-ந்தேதி வரை தங்களது பெயர்களை பதிவு செய்யவேண்டும். இவர்களுக்கான தேர்வு அனுமதிச் சீட்டு நவம்பர் 1-ந்தேதி வெளியிடப்படும். விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுமதிச்சீட்டில் இடம் பெற்றிருக்கும்.

மேலும் விளக்கங்கள் பெற, 'ஆள்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்), புனித ஜார்ஜ் கோட்டை வளாகம், சென்னை-600009' என்ற முகவரியிலோ, 044-2567 4924 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

தேர்வு நடைமுறைகள் நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் முற்றிலும் தானியங்கி முறையில் மேற்கொள்ளப்படும். எனவே, ஆள்சேர்ப்புக்கு உதவுவதாகவோ அல்லது வேலை வாங்கித் தருவதாகவோ கூறி, மோசடியில் ஈடுபடுவோரை நம்பி விண்ணப்பதாரர்கள் ஏமாந்துவிட வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story
  • chat