வேளாண் கல்லூரி மாணவி தற்கொலையில் சந்தேகம்
வாணாபுரம் அருகே அரசு வேளாண்மை கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசாரிடம் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணாபுரம் அருகே அரசு வேளாண்மை கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசாரிடம் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3-ம் ஆண்டு மாணவி
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூரில் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஓசூர் சிப்காட் பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவரது மகள் காயத்ரியும் (வயது 21), கல்லூரி விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு வேளாண்மை பட்டப்படிப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் காயத்ரி அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். இதனை பார்த்தவர்கள் உடனே மாணவியை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் வாணாபுரம் போலீசார் நேரில் சென்று கல்லூரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று கல்லூரிக்கு விரைந்து வந்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். அத்துடன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கல்லூரி முதல்வர் மீது புகார்
அப்போது மாணவியின் பெற்றோர் கூறுகையில், 'எங்கள் மகள் உயிரிழந்ததற்கான காரணம் என்ன? என்று தெரிய வேண்டும். கல்லூரி முதல்வர் மீது எனது மகள் புகார் தெரிவித்து கடிதம் எழுதி வைத்துள்ளார். எனவே, கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
கல்லூரி முதல்வர் கூறுகையில், 'காயத்ரி சிறந்த மாணவி, எந்த ஒரு குறைகள் கூறும் அளவிற்கு இதுவரை நடந்து கொள்ளவில்லை. மாணவி உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை தருவது மட்டுமல்லாமல், மாணவியின் இறப்பு பேரிழப்பாக உள்ளது. மாணவி உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்' என்றார்.
கடிதம்
மாணவி எழுதியுள்ள கடிதத்தில், மாணவ-மாணவிகள் நண்பர்களாக பேசினால் ஆசிரியர்கள் சந்தேகப்படுவதாகவும், இதனால் மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அப்பா, அம்மா, மாமா, தம்பி அனைவரையும் ரொம்ப கஷ்டப்படுத்துகிறேன் என்றும் எழுதியுள்ளார்.
இதற்கிடையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் போலீசார் மாணவி தற்கொலை செய்து கொண்ட கிணற்று பகுதிக்கு வந்து விசாரணை செய்து, வேறு ஏதாவது தடயங்கள் உள்ளனவா? என்று கண்டறிவதற்காக கிணற்றில் இருக்கும் தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றினர்.
சாவில் சந்தேகம்
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்துள்ள புகாரில், மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து மாணவியின் பெற்றோர் உடலை பெற்றுக்கொள்வதற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர்.