தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருத்தணியில் பாதுகாப்பு பணி தீவிரம்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருத்தணியில் பாதுகாப்பு பணி தீவிரம்
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருத்தணியில் பாதுகாப்பு பணியில் 300 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர்

தமிழகம் முழுவதும் வரும் 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருத்தணியில் பொதுமக்கள் கடைகளுக்கு சென்று புத்தாடைகள், பட்டாசுகள் இனிப்புகள் உள்ளிட்ட தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.

பண்டிகை காலத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடந்து விடாமல் இருப்பதற்காக திருத்தணி போலீஸ் துறை பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தெரிவித்ததாவது:-

வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் அதிகளவு கூடுவதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு போலீஸ் துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் அதிக அளவு கூடும் இடங்களான முருகன் கோவில் மலைப்பாதை, அண்ணா பஸ் நிலையம், சித்தூர் சாலை சந்திப்பு, உள்பட ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய 14 பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேற்கண்ட 14 இடங்களிலும் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு நேரடியாகவும், பைனாகுலர் மூலமும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ரோந்து பணி, ஒலிபெருக்கி மூலம் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், குற்ற தடுப்பு முறைகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் திருத்தணி நகரின் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து வருகின்றனர். திருத்தணி உட்கோட்டத்தில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story