அதிமுக பொதுக்குழு - அனுமதி கிடைக்காது என உயர்க்கல்வித்துறை தகவல்


அதிமுக பொதுக்குழு - அனுமதி கிடைக்காது என உயர்க்கல்வித்துறை தகவல்
x

தனியார் கல்லூரியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி கிடைக்காது என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தனியார் கல்லூரியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி கிடைக்காது என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற ஜூலை 11-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தை எங்கு நடத்தலாம் என்பது குறித்து அக்கட்சி நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை மீனம்பாக்கம் அருகில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அந்த கல்லூரியில் சுமார் 2 ஆயிரம் கார்கள் நிறுத்தும் வசதி கொண்ட மைதானம், மிகப்பெரிய அரங்கங்கள் ஆகியவை உள்ளது.

இந்த கல்லூரியில் வைத்து பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு அதிமுக முடிவு செய்துவிட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகிவில்லை. என்றாலும் அதிமுக இந்த கல்லூரியில் வைத்து பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு முடிவு செய்தாலும் அதற்கு உயர்கல்வித்துறையின் அனுமதி கிடைக்குமா என்பது சிக்கலாக மாறியுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதி, மத, இயக்க செயல்பாடுகள் மற்றும் அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது. சமீபத்தில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ்-ன் பயிற்சி முகாம் நடந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அந்த பள்ளிக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கமும் பெறப்பட்டது.

இந்த சூழலில் அதிமுக நிர்வாகிகள் இன்று பார்வையிட்ட கல்லூரியானது அரசு நிதி உதவி பெறும் கல்லூரியாகும். அந்தக் கல்லூரியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த உயர்கல்வித்துறையின் அனுமதி கிடைக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.

அங்கு வைத்து பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு முடிவு செய்தால் உயர்கல்வித்துறையின் அனுமதியைப் பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறுவதற்கு விண்ணப்பித்தால் அனுமதி கிடைக்காது என்பதுதான் உயர்கல்வித்துறையின் சார்பில் கிடைக்கப்பெறும் தகவலாக உள்ளது.


Next Story