அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி...! - ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளாராக எடப்பாடி பழனிசாமியை சுப்ரீம் கோர்ட்டு அங்கீகரித்துள்ளது.
சென்னை,
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விசாரித்தது. அப்போது, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அதிரடி உத்தரவிட்டது. இதன் மூலம் அதிமுக-வின் முழு கட்டுப்பாடும் எடப்பாடி பழனிசாமி வசமாகி உள்ளது.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்குள்ள கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியேற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், அதிமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.