செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை,
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான கழக நிர்வாகிகள் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் அவர்கள் முழக்கமிட்டனர்.
இதே போல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டத்தின் சார்பில் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே மாநில மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி மதுரையில் செல்லூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு, வேலூர், சேலம், கோவை, ஆகிய மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.