சேலத்தில் இருந்து கொச்சி, பெங்களூருவுக்கு விமான சேவை தொடக்கம்


சேலத்தில் இருந்து கொச்சி, பெங்களூருவுக்கு விமான சேவை தொடக்கம்
x

சேலத்தில் இருந்து கொச்சி, பெங்களூருவுக்கு நேற்று விமான சேவை தொடங்கியது. பயணிகள் வரவேற்பு நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி ஆகியோர் பங்கேற்றனர்.

சேலம்

ஓமலூர்:-

சேலத்தில் இருந்து கொச்சி, பெங்களூருவுக்கு நேற்று விமான சேவை தொடங்கியது. பயணிகள் வரவேற்பு நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி ஆகியோர் பங்கேற்றனர்.

விமான சேவைக்கு அனுமதி

சேலம் அருகே காமலாபுரத்தில் விமான நிலையம் உள்ளது. கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பு வரை இந்த விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக சேலத்தில் இருந்து விமான சேவை நடைபெறவில்லை.

இதையடுத்து சேலம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் தொழில் அதிபா்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று சிவில் விமான போக்குவரத்து துறை மீண்டும் சேலத்தில் விமான சேவையை தொடங்க அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, உதான் 5 திட்டத்தின் கீழ் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனத்தின் மூலம் பெங்களூரு, சேலம், கொச்சி இடையே விமான போக்குவரத்து சேவையை தொடங்க பணிகள் நடைபெற்றன. குறிப்பாக விமான நிலையத்தில் கூடுதல் விமானம் நிறுத்தும் தளம் ரூ.6½ கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.

சேலத்திற்கு வந்த விமானம்

மேலும் ரூ.1.3 கோடி மதிப்பீட்டில் விமான நிலைய உட்புறப் பகுதிகளை சமப்படுத்துதல் மற்றும் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தன. இதன்தொடர்ச்சியாக நேற்று சேலத்தில் இருந்து விமான சேவை தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

அதன்படி நேற்று மதியம் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனத்தின் சார்பில் 72 பயணிகள் அமர்ந்து பயணம் செய்யும் வகையிலான ஏ.டி.ஆர். ரக விமானம் பெங்களூருவில் இருந்து மதியம் 12.40 மணிக்கு 34 பயணிகளுடன் சேலத்திற்கு புறப்பட்டு வந்தது. இந்த விமானம் சேலம் விமான நிலையத்திற்கு மதியம் 1.40 மணியளவில் வந்து சேர்ந்தது. இதையடுத்து சேலம் விமான நிலையத்தில் பயணிகளை வரவேற்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர்கள் பங்கேற்பு

தமிழக நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் பெங்களூருவில் இருந்து விமானத்தில் சேலத்துக்கு வந்திறங்கிய பயணிகளை வரவேற்றனர்.

தொடர்ந்து சேலத்தில் இருந்து 16 பயணிகள் மற்றும் ஒரு குழந்தையுடன் கொச்சிக்கு அதே விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தை அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் கொச்சியில் இருந்து சேலத்திற்கு திரும்பிய அந்த விமானத்தில் 3 பயணிகள் சேலத்துக்கு வந்தனர். அதன்பிறகு சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்ற அதே விமானத்தில் 25 பேர் பயணம் ெசய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story