விமானநிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் விரிவாக்கத் திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் - மேலாண்மை இயக்குனர் தகவல்


விமானநிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் விரிவாக்கத் திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் - மேலாண்மை இயக்குனர் தகவல்
x

விமானநிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் விரிவாக்கத் திட்டத்துக்கு தமிழக அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறினார்.

சென்னை

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் 'இனி வரிசைகள் இல்லை, க்யூ.ஆர்.மட்டுமே' என்ற புதிய முறையை மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் மூலம் பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள க்யூ.ஆர். குறியீட்டை தங்கள் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து, செல்ல வேண்டிய இடத்தையும், பணம் செலுத்தும் முறையையும் தேர்வு செய்தால், க்யூ.ஆர். டிக்கெட்டுகள் தானாகவே உருவாக்கப்பட்டு செல்போனில் பதிவிறக்கம் செய்யப்படும். 20 சதவீதம் டிக்கெட் கட்டணம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. தேவையில்லாமல் ரெயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. விரைவாகவும், பாதுகாப்பான முறையிலும் பயணிக்க முடியும்.

பின்னர் மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறியதாவது:-

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக, அடையாறு ஆற்றில் மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதில் சுரங்கம் அமைக்கும் போது அருகில் இருக்கும் கட்டிடங்கள் வலுவாக உள்ளதா?, விரிசல் ஏற்படுமா? என கணக்கெடுக்கும் பணி முடிந்துள்ளது.

இதில், ஏதாவது கட்டிடங்களுக்கு பாதிப்பு வந்தால், அதை சரி செய்யும் பொறுப்பு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு உள்ளது. சீனாவில் இருந்து சுரங்கம் தோண்டும் எந்திரம் வந்துள்ளது.

தனித்தனி பாகங்களை வந்துள்ள இவற்றை ஒருங்கிணைக்கும் பணி நடைபெறுகிறது. 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணியில் சுரங்கம் அமைக்கும் பணி மிகப்பெரிய சவாலாக உள்ளது.

விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், தாம்பரம் வரை உயர்த்தப்பட்ட பாதை அமைக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு உள்ளதால், அவர்களிடம் பலகட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

இந்த ஆலோசனை நல்ல படியாக முடிந்துள்ளது. எனவே, விமானநிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் விரிவாக்கத் திட்டத்துக்கு தமிழக அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story