உறுதி அளித்தபடி உத்தரவை நிறைவேற்றாததால் ஆஜர்:மதுரை ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்ட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் - "கடமை தவறும் அதிகாரிகளுக்கு வக்கீல்கள் துணை போகக்கூடாது" என நீதிபதி அறிவுறுத்தல்


உறுதி அளித்தபடி உத்தரவை நிறைவேற்றாததால் ஆஜர்:மதுரை ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்ட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் - கடமை தவறும் அதிகாரிகளுக்கு வக்கீல்கள்  துணை போகக்கூடாது என நீதிபதி அறிவுறுத்தல்
x

உறுதி அளித்தபடி கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாததால், மதுரை ஐகோர்ட்டில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

மதுரை


உறுதி அளித்தபடி கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாததால், மதுரை ஐகோர்ட்டில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் கலைச்செல்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

பணி இடைநீக்க காலத்தை கணக்கில் கொண்டு பணி வரன்முறை செய்து அதற்கான பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டு மனு செய்திருந்தேன். எனது கோரிக்கை குறித்து பரிசீலித்து உரிய முடிவெடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், கோர்ட்டு பிறப்பித்த காலக்கெடுவுக்குள் பள்ளிக்கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதததால் 2021-ம் ஆண்டு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அப்போது, பள்ளிக்கல்வித்துறையின் தொடக்கக்கல்வி இயக்குனராக இருந்த அறிவொளி, ஐகோர்ட்டு உத்தரவு 3 மாதத்துக்குள் நிறைவேற்றப்படும் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். ஆனால் தற்போது வரை கோர்ட்டு உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. எனவே, கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆஜர்

இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது பள்ளிக்கல்வி இயக்குனராக உள்ள அறிவொளி ஆஜராகியிருந்தார்.

கோர்ட்டு உத்தரவு கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது என்று அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வக்கீல் தெரிவித்தார்.

ஆனால். அதனை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரர் 2019-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார். கோர்ட்டு உத்தரவு நிறைவேற்றப்படாததால் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 3 மாதத்திற்குள் உத்தரவை நிறைவேற்றுவதாக உறுதி மொழி கொடுக்கப்பட்டுள்ளது. கோர்ட்டில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரை ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்த பின்னர் கோர்ட்டு உத்தரவு நிறைவேற்றப்பட்டு இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது.

கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளுக்கு ஆதரவாக பேச வேண்டாம். இது அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது. கோர்ட்டு உத்தரவிட்டால் நிறைவேற்றுவது அதிகாரிகளின் கடமை. தவறு செய்யும் அதிகாரிகளுக்கு அரசு வக்கீல்கள் துணை போக வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

நிபந்தனையற்ற மன்னிப்பு

அத்துடன், இயக்குனர் அறிவொளியிடம், "உங்கள் மீது ஏன் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர், "கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாதது தவறுதான். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி கோர்ட்டு உத்தரவிட்டால் முறையாக நிறைவேற்றுவேன்" என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து நீதிபதி, "தமிழக அரசில் பல்வேறு துறைகள் இருந்தாலும், பள்ளிக்கல்வித்துறை மீதுதான் அதிக அளவு கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் உள்ளன.. இந்த துறையில் பணியாற்றும் அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவை மதிப்பதில்லை. இருப்பினும் உங்களது மன்னிப்பை கோர்ட்டு ஏற்றுக்கொள்கிறது. ஆனால், எதிர்காலத்தில் அவமதிப்பு வழக்கு வராத அளவுக்கு உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.


Next Story