பெரம்பலூரில் 32 கிணறுகளையும் சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவு


பெரம்பலூரில் 32 கிணறுகளையும் சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவு
x

பெரம்பலூர் நகராட்சியில் சீராக குடிநீர் வழங்க ஒரு வார காலத்திற்குள் 32 கிணறுகளையும் சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு தொடர்ந்து சீரான இடைவெளியில் குடிநீர் வழங்குவதற்கு கிணறுகளில் இருந்து கிடைக்கும் நீரின் அளவு, அந்த நீர் குடிப்பதற்கு உகந்ததாக உள்ளதா?, கிணறுகள் சுத்தமாக இருக்கின்றதா? என்பது குறித்து ஆலம்பாடி, உப்போடை, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், துறைமங்கலம், செங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரும்பாலான கிணறுகளில் அதிகளவு தண்ணீர் இருந்ததை பார்வையிட்ட கலெக்டர் துறைமங்கலம் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்த நீரை எடுத்து குடித்து பார்த்தார். கிணற்று நீரின் சுவை நன்றாக இருந்ததால், பயன்பாடற்ற அந்த கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றி சுத்தம் செய்து பிறகு ஊரும் நீரை பொதுமக்களுக்கு வினியோகம் செய்திட உத்தரவிட்டார்.

32 கிணறுகள்...

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து கிணறுகளிலும் உள்ள நீரினை ஆய்வுக்குட்படுத்தி குடிப்பதற்கு ஏற்ற நிலையில் நீர் உள்ள கிணறுகளில் இருந்து உடனடியாக நீரை வினியோகம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயன்பாடற்ற நிலையில் அதிகளவிலான நீர் இருப்பு உள்ள கிணறுகளில் இருந்து நீரை வெளியேற்றிவிட்டு, கிணற்றை தூர்வாரி சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் தெளித்து பிறகு ஊரும் நீரை ஆய்வுக்குட்படுத்தி குடிப்பதற்கு உகந்ததாக உள்ளதா? என கண்டறிய வேண்டும். குடிப்பதற்கு உகந்த நிலையில் உள்ள கிணறுகளில் இருந்து நகராட்சி பகுதி மக்களுக்கு சீரான இடைவெளியில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரம்பலூர் நகராட்சி ஆணையருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நகராட்சிக்குட்ட பகுதிகளில் அமைந்துள்ள 32 கிணறுகளும் சுத்தம் செய்யப்பட்டு, அதில் உள்ள நீர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, ஒருவார காலத்திற்குள் முழுப்பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலெக்டர் அறிவுறுத்தினார்.


Next Story