தமிழக எம்.பிக்கள் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்பு: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தகவல்


தமிழக   எம்.பிக்கள் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்பு:  முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தகவல்
x

வெள்ள நிவாரண தொகையை உடனே வழங்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி எம்.பிக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்திட அனைத்துக் கட்சி எம்.பிக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கோரியுள்ளதாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் "மிக்ஜாம்" புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த இந்த இரண்டு மிகப் பெரிய இயற்கைப் பேரிடர்களுக்கும் ஒன்றிய அரசிடமிருந்து நிவாரணத் தொகையாக தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 37,907.19 கோடி ஏற்கெனவே கோரியுள்ளது.

இது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 19,692.67 கோடி ரூபாயும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 18,214.52 கோடி ரூபாயும் உள்ளடக்கியதாகும்.

"மிக்ஜாம்" புயலினால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் எற்பட்ட கடுமையான பாதிப்புகளைப் பார்வையிட ஒன்றிய குழுவினர் டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் வந்து பார்வையிட்டுச் சென்றனர். அதோடு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாட்டிற்கு வந்துமிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை கடந்த மாதம் 7 ஆம் தேதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து உரிய நிவாரணத் தொகையை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

அதேபோன்று, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகனமழை காரணமாக ஏற்பட்ட பெருத்த பாதிப்புகளை மத்தியக் குழு 20-12-2023 அன்று நேரில் பார்வையிட்டனர். மத்தியக் குழுவினர் இம்மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்திடத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு செய்து தந்திருந்தது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் 26-12-2023 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சென்று, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 ஆம் தேதி அன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது,தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புகள் தொடர்பாக குறிப்பிட்டு, சேதங்கள் குறித்த தனது வருத்தத்தையும், வேதனையையும் பதிவு செய்திருந்தார்.

ஆனால் மத்திய குழுக்களின் வருகைக்குப் பின்னரும், மத்திய அமைச்சர்கள் பார்வையிட்டதற்குப் பிறகும், நிவாரணத் தொகை கோரி தமிழக அரசின் சார்பில் இரண்டு கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், மத்திய அரசிடமிருந்து இதுவரை நிவாரணப் பணிகளுக்கென எந்தவொரு நிவாரணத் தொகையும் பெறப்படவில்லை. எனவே தமிழ்நாடு அரசு கோரியுள்ள 37,907.19 கோடி ரூபாயினை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பிக்களும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.


Next Story