மழை பாதிப்பு ஏற்படும் இடங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்


மழை பாதிப்பு ஏற்படும் இடங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார்  - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
x

சென்னையில் விடிய விடிய கனமழை பெய்த நிலையில் பாதிப்பு ஏற்படும் இடங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னை

அமைச்சர் ஆய்வு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழைக்காலங்களில் பேரிடர்களை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள ஆயத்த பணிகள் குறித்து, சென்னை எழிலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மழைநீர் அகற்றம்

தென்மேற்கு பருவமழைக் காலத்தில், 01-06-2023 முதல் 19-06-2023 முடிய 25.9 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும் 22 சதவீதம் குறைவு ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 27 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 11.10 மி.மீ. ஆகும். சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று காலை 8.30 மணி வரை) 213.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் சராசரி 78.03 மி.மீ. ஆகும்.

சென்னையின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் 83 இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில் 28 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டு விட்டது. மீதமுள்ள இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் விரைந்து அகற்றப்பட்டு வருகிறது.

துரித நடவடிக்கை

விடிய விடிய பெய்த மழை காரணமாக, மழைநீர் தேங்கிய பகுதிகளில் இருந்து அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் புகார்கள் பெறப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வருவாய்த்துறை சார்பிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை மழையால் எந்தவிதமான உயிர்சேதமோ, கால்நடை உயிரிழப்போ ஏற்படவில்லை.

தீவிர கண்காணிப்பு

தென்மேற்கு பருவமழையையொட்டி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவையான அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். மாவட்ட கலெக்டர்களுக்கும் உரிய அறிவுரைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையினர் 40 பேர், மாநகராட்சி நிர்வாகத்துடன் களப்பணியில் இருக்கிறார்கள். சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மோட்டார், நீர் உறிஞ்சும் பம்புகள் தயார் நிலையில் இருக்கின்றன. கடந்த முறை பாதிப்புக்குள்ளான இடங்கள் இந்தமுறை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புகார்கள் தெரிவிக்கலாம்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் ஜே.சி.பி. எந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், 9445869848 என்ற வாட்ஸ்-அப் எண் மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story