பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ.11¾ கோடி ஒதுக்கீடு


பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ.11¾ கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 14 Oct 2023 9:00 PM GMT (Updated: 14 Oct 2023 9:00 PM GMT)

குன்னூர் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ.11¾ கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

நீலகிரி

குன்னூர் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ.11¾ கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

பஸ் நிலையம்

குன்னூரில் அறிஞர் அண்ணா நகராட்சி பஸ் நிலையம் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பழமையான பஸ் நிலையம் ஆகும். இந்த பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி, கோத்தகிரி, மஞ்சூர், கொலக்கொம்பை மற்றும் மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

காலப்போக்கில் ஏற்பட்ட இடபற்றாக்குறை காரணமாக வெளியூர் பஸ்கள் செல்ல குன்னூர்-ஊட்டி சாலையில் லெவல் கிராசிங் அருகே பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு நிலையம் அருகே சிறியளவு பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் மினி பஸ்கள், அரசு பஸ்கள் வந்து செல்வதால் தற்போது பஸ் நிலையத்தில் இட பற்றாக்குறை உள்ளது.

நிதி ஒதுக்கீடு

இந்தநிலையில் நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் குன்னூர் பஸ் நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் அருணா உடனிருந்தார். பின்னர் அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறியதாவது:-

குன்னூரில் ரூ.13 கோடி செலவில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் (மல்டிலெவல் பார்க்கிங்) அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 350 வாகனங்களை நிறுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்துவதாக கூறப்பட்ட குன்னூர் பஸ் நிலையம் இதுவரை விரிவாக்கம் செய்ய முடியவில்லை.

இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ.11.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் 26 பஸ்கள் கூடுதலாக நிறுத்த முடியும். ஆற்றோர பகுதி உள்ளதால் அதற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆய்வு செய்து, அதற்கேற்ப விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story