தடுப்பணைகளை புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு
பழைய ஆயக்கட்டில் உள்ள தடுப்பணைகளை புனரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தடுப்பணையில் உள்ள கான்கிரீட்டை உடைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி
பழைய ஆயக்கட்டில் உள்ள தடுப்பணைகளை புனரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தடுப்பணையில் உள்ள கான்கிரீட்டை உடைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கான்கிரீட் உடைக்கும் பணி
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் புதிய, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதை தவிர ஒப்பந்தப்படி கேரளாவுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் பழைய ஆயக்கட்டில் பள்ளிவிளங்கால், காரப்பட்டி, பெரியணை, அரியாபுரம், வடக்கலூர் ஆகிய 5 தடுப்பணைகள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில் தடுப்பணைகள் சேதமடைந்ததால் தண்ணீர் வீணாகியது. இதனால் கடைமடை வரை உள்ள விவசாயிகளுக்கு உரிய தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டது. தற்போது தடுப்பணைகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து பழைய தடுப்பணையை உடைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு
பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு உட்பட்ட பள்ளிவிளங்கால், காரப்பட்டி, பெரியணை, அரியாபுரம், வடக்கலூர் ஆகிய தடுப்பணைகள் சேதமடைந்து உள்ளன. இதன் காணமாக தடுப்பணையில் தண்ணீர் திறக்கும் போது நீர் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து தடுப்பணையை புனரமைக்க உலக வங்கி மூலம் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கிடையில் தடுப்பணையில் உள்ள கான் கிரீட்டை உடைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்த பிறகு மீண்டும் புதிதாக கான்கிரீட் போடப்படும். மேலும் சேதமடைந்த மதகுகளும் சீரமைக்கப்படும். இந்த நிதியை கொண்டு குளப்பத்துக்குளத்தில் உள்ள ஒரு மதகு புனரமைக்கவும், மற்றொரு மதகு சீரமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.