தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ.4.96 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவு


தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ.4.96 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவு
x

அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்த மாவட்டங்களை 3 ஆகப் பிரித்து ரூ.4.96 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "மாவட்டங்கள்தோறும் புத்தகக் காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும். இதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்கும்" என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தில், தமிழகத்தில் சென்னை புத்தகக் காட்சி போன்று மாவட்டம்தோறும் புத்தகக் காட்சிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த 4.96 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் மாவட்டங்கள் 3 ஆக பிரிக்கப்பட்டு நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.17.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், கடலூர், கரூர் மாவட்டங்களுக்கு தலா ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மீதம் உள்ள 23 மாவட்டங்களுக்கு தலா ரூ.12 லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புத்தக கண்காட்சிக்கு மாநில அளவில் பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் என்றும், இந்தக் குழுவில் நூலகத்துறை, பாடநூல் கழகம், பதிப்பாளர் சங்கம் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், மாவட்ட அளவில் கண்காட்சிகளை நடத்த கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும், இந்தக் குழுவில் அனைத்துத் துறை அதிகாரிகள், வாசகர்கள், பதிப்பாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story