திருமணத்துக்கு மறுத்ததால் கழுத்தை நெரித்து கொன்றது அம்பலம்


திருமணத்துக்கு மறுத்ததால் கழுத்தை நெரித்து கொன்றது அம்பலம்
x
தினத்தந்தி 5 Sept 2023 4:45 AM IST (Updated: 5 Sept 2023 4:45 AM IST)
t-max-icont-min-icon

மஞ்சூர் அருகே குடிநீர் தொட்டியில் இளம்பெண் பிணமாக கிடந்த வழக்கில், திருமணத்துக்கு மறுத்ததால் கழுத்தை நெரித்து கொன்றது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக காதலன் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

மஞ்சூர்

மஞ்சூர் அருகே குடிநீர் தொட்டியில் இளம்பெண் பிணமாக கிடந்த வழக்கில், திருமணத்துக்கு மறுத்ததால் கழுத்தை நெரித்து கொன்றது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக காதலன் கைது செய்யப்பட்டார்.

இளம்பெண் பிணம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே எடக்காடு பாதகண்டியை சேர்ந்தவர் ராமநாதன். இவருடைய மனைவி கல்யாணி. இவர்களுக்கு பவித்ரா, விசித்ரா (வயது 23) என 2 மகள்கள் உள்ளனர். பவித்ரா திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார். விசித்ரா பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். இதையடுத்து அவருக்கு பெற்றோர் திருமண வரன் பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி விசித்ராவை காணவில்லை. இதனால் குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது பாதகண்டி கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் தண்ணீர் தொட்டியில் விசித்ரா பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயலட்சுமி, மஞ்சூர் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்து யாராவது உடலை தொட்டியில் வீசினார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கழுத்தை நெரித்து கொலை

இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிவில் விசித்ரா கழுத்தில் காயங்கள் இருந்ததும், கழுத்து நெரிக்கப்பட்டதால் இறந்ததும் தெரியவந்தது. இதனால் கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

மஞ்சூர் சிவசக்தி நகரை சேர்ந்த ஜெயசீலன் (23) என்பவரும், விசித்திராவும் காதலித்து வந்ததும், திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தண்ணீர் தொட்டியில் உடலை வீசியதும் தெரியவந்தது. தொடர்ந்து ஜெயசீலனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஊட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நீதிபதி தமிழினியன் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஜெயசீலன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்

ஜெயசீலனும், விசித்ராவும் எடக்காடு பள்ளியில் ஒன்றாக படித்தனர். அப்போது அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. விசித்ரா கல்லூரிக்கு சென்ற போது, இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். பின்னர் இது காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் ஜெயசீலன் நடவடிக்கை, விசித்ராவுக்கு பிடிக்கவில்லை. இதனால் ஜெயசீலனுடன் பழகுவதை நிறுத்திவிட்டார். இந்தநிலையில் விசித்ராவுக்கு பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெயசீலன் செல்போன் மூலம் விசித்ராவை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால், விசித்ரா செல்போனை எடுக்கவில்லை.

இதையடுத்து கடந்த 1-ந் தேதி ஜெயசீலன் பாதகண்டிக்கு சென்று, தனியாக பேச வருமாறு விசித்ராவை வீட்டின் அருகில் உள்ள பகுதிக்கு அழைத்து சென்றார். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ஜெயசீலன் கூறியுள்ளார். அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயசீலன் அருகில் இருந்த கயிறை எடுத்து விசித்ராவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவர் உடலை தண்ணீர் தொட்டியில் வீசி விட்டு தப்பி சென்று விட்டார். போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கிக்கொண்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story