விழுப்புரம்: முன்னாள் சென்ற லாரி மீது அரசு பஸ் மோதி கோர விபத்து - நடத்துனர் பலி
மயிலம் அருகே முன்னாள் நின்றுகொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் நடத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
விழுப்புரம்:
சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு விருதாச்சலம் சென்று கொண்டிருந்தது. பஸ்சை ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கோறழைசாவடி குப்பம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் இளையராஜா(42), என்பவர் ஓட்டி சென்றார். நடத்துனராக கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(45) என்பவர் சென்றுள்ளார்.
திண்டிவனம் அடுத்த மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேனிப்பட்டு என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தபோது முன்னாள் சென்ற லாரி மீது அரசு பஸ் அதி வேகமாக மோதியது.
இதில் பஸ்சில் இடது புறமாக அமர்ந்து சென்ற நடத்துனர் வெங்கடேசன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணம் செய்த விருத்தாசலம் பகுதியை சேர்ந்த தலாஹிர் அஹமது(35), உன்னலட்சுமி (42), திட்டக்குடியை சேர்ந்த அமல்ராஜ்(25), திருக்கோவிலூரை சேர்ந்த கோவிந்தராஜ்(41), வேப்பூர் பகுதியை சார்ந்த சுரேஷ்(37), உஷா (42) உள்ளிட்ட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த நடத்துனரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து மயிலம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.