தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்த மாணவிக்கு உற்சாக வரவேற்பு
தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்த மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவியான ஷர்வாணிகா, இலங்கையில் நடைபெற்ற ஆசிய செஸ் போட்டியில் பங்கேற்றார். இதில் 7 வயதுக்கு உட்பட்டோருக்கிடையே நடைபெற்ற 3 பிரிவுகளிலும் வெற்றி பெற்று, மொத்தம் 6 தங்கப்பதக்கங்களையும், சுழற்கோப்பைகளையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நேற்று அவர் குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் அரியலூருக்கு வந்தார். ரெயில் நிலையத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது சொந்த ஊரான உடையார்பாளையத்தில் அவரை வரவேற்று, ரோட்டரி சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் பட்டாசு வெடித்து, வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். நிகழ்ச்சியில் க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஷர்வாணிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அப்பகுதி மக்கள், பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலரும் அவரை பாராட்டி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.