தஞ்சை அருகே கார் மீது ஆம்னி பஸ் மோதியதில் மூதாட்டி பலி; கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்


தஞ்சை அருகே கார் மீது ஆம்னி பஸ் மோதியதில் மூதாட்டி பலி; கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்
x

தஞ்சை அருகே கோவிலுக்கு சென்றபோது கார் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் மூதாட்டி பலியானார்.

தஞ்சாவூர்:

திருச்சியை அடுத்த பிச்சாண்டார் கோவில் ராஜகோபால் நகரை சேர்ந்தவர் ஜவகர்லால். இவரது மனைவி பாக்கியராணி (வயது65). ஜவகர்லால் இன்று காலை தனது மனைவி, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் என 6 பேருடன் ஒரு காரில் புறப்பட்டு மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.

இந்த கார் தஞ்சையை அடுத்த நெடார் பகுதியில் சென்றபோது எதிரே சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி பயணிகளுடன் ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. கண்இமைக்கும் நேரத்தில் ஆம்னிபஸ்சும், காரும் மோதிக் கொண்டன.

காரின் இடிபாடுக்குள் சிக்கியவர்கள் காயத்துடன் தங்களை காப்பாற்றும்படி சத்தம் போட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் இடிபாடுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் பாக்கியராணி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். ஜவகர்லால்நேரு அவரது மகன் நாகராஜன் ஆகிய 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். மற்ற 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயம் அடைந்த 2 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விபத்தில் உயிரிழந்த பாக்கியராணி உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக தஞ்சை-கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story